Friday, December 11, 2009

எங்கள் நாடு

மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
பார் மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.

இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில்கற் போம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

Thursday, December 10, 2009

பாரத தேசம்


பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

சரணங்கள்

1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

5. சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

8. பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

9. ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

10. குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

12. காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)

பாரத நாடு

             பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

சரணங்கள்

1. ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

2. தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

3. நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

4. ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

5. வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

6. யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

7. ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

8. தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

நாட்டு வணக்கம்

எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ? - இதை
'வந்தே மாதரம் வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே - இதை
'வந்தே மாதரம் வந்மே மாதரம்'
என்று வணங்கேனோ?

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
'வந்தே மாதரம் வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ?

ஜய வந்தே மாதரம்

                 பல்லவி

வந்தே மாதரம் - ஜய
வந்தே மாதரம்.

சரணங்கள்

1. ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)

2. ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

3. நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)

4. ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே)

வந்தே மாதரம்

               பல்லவி

வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

1. ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)